திமுக தலைவர் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த போது செய்யத் தவறியதை, தற்போதைய தமிழக முதல்வரான ஜெயலலிதா துணிச்சலாக செய்து முடித்துள்ளார் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அறிக்கையில்,
திருச்செங்கோட்டில் நேற்று நடைபெற்ற காமராஜர் பிறந்த தின விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக ஒரு அற்புதமான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியவர் ஜெயலலிதா. 234 சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய இந்த தீர்மானம் 7 கோடி தமிழர்களின் தீர்மானமாகும். தமிழக முதல்வராக கருணாநிதி பதவி வகித்த போது செய்யத் தவறியதை, ஜெயலலிதா தனது பதவிக்காலத்தில் துணிச்சலாகச் செய்து முடித்துள்ளார்.
இலங்கை மீது அனைத்து நாடுகளும் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ராஜபட்சேவை போர்க் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற தீர்மானங்களை மத்திய அரசு எள்முனை அளவு கூட மதிக்கவில்லை. மாறாக ராஜபட்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறது.
ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் உள்ள ஷரத்துகளை இலங்கை மதிக்காதபோது கச்சத்தீவு ஒப்பந்தத்தை நாம் ஏன் மதிக்க வேண்டும். கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும்.
கருணாநிதி ஆட்சியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இதை இப்போதுள்ள ஆட்சியாளர்கள் மறந்துவிட்டனர். இதை ஜெயலலிதா கவனத்துக்கு யாரும் கொண்டு போகவில்லை என்று நினைக்கிறேன். இதற்குக் காரணமானவர்கள் மீது அவர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமச்சீர் கல்விப் பிரச்சினை 1 கோடி மாணவ மாணவிகளைப் பாதிக்கின்ற விஷயம், சமச்சீர் கல்வி உலகத்தரமானதாக இல்லை என்பது பொறுப்புள்ள அரசின் அறிவுபூர்வமான அணுகுமுறை அல்ல.
சமச்சீர் கல்வியை உலகத்தரம் வாய்ந்ததாகக் கொண்டுவர குழு அமைக்கப்பட்டுள்ளது என்கிறார் முதல்வர். அந்தக் குழுவில் இருப்பவர்கள் சிலர் கல்வியாளர்களே அல்ல. இந்தக் குழுவுக்கு காலநிர்ணயம் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு கருணாநிதி கொண்டுவந்த சமச்சீர் கல்வியை தமிழக அரசு புறக்கணிப்பது நல்லதல்ல என்று காந்திய மக்கள் இயக்கம் கரிசனத்தோடு தெரிவிக்கிறது, எனவும் தெரிவித்தார்.