Total Pageviews

Wednesday, 7 September 2011

காற்றில் கரைந்தவர்கள்

உலகின் எந்த ஒரு இனமும்
கருணைக்காக
இவ்வளவு காலமும்
ஏங்கி இருக்காது .

உலகின் எந்த ஒரு இனமும்
சுதந்திரத்திற்காக 
இவ்வளவு வாதைகளை
தாங்கியிருக்காது.

உலகின் எந்த ஒரு இனமும்
வாழ்தலின் பொருட்டு
இவ்வளவு இழப்புகளை
எதிர்கொண்டிருக்காது.

உலகின் எந்த ஒரு இனமும்
சர்வதேசத்தால்    
இவ்வளவு தூரம்
புறக்கணிக்கப் பட்டிருக்காது. 

உலகின் எந்த ஒரு இனமும்
தன் இனத்துரோகிகளால்
இவ்வளவு அபத்தமாக
காட்டிக் கொடுக்கப்பட்டிருக்காது.

உலகின் எந்த ஒரு இனமும்
இறையாண்மையின் பெயரால்
இவ்வளவு கொடூரமாக
கொன்றொழிக்கப் பட்டிருக்காது. .

உலகின் எந்த ஒரு இனமும்
நியாயத்தின் வழி நின்றதால்
இவ்வளவு மோசமாக
கை விடப்பட்டிருக்காது. 
.
உலகின் எந்த ஒரு இனமும்
நிராகரிப்பின் வலி சுமந்து
இவ்வளவு நெடுந்தூரம்
பயணப் பட்டிருக்காது.

உலகின் எந்த ஒரு இனமும்
தன் மரணத்தை
இவ்வளவு அருகாமை சென்று
தரிசித்திருக்காது.
 
உலகின் எந்த ஒரு இனமும்
அழிவின் விளிம்பில் நின்று   
மட்டை பந்து போட்டியை
இவ்வளவு ஆர்வமாக
வேடிக்கைப் பார்த்திருக்காது. 

உலகின் எந்த ஒரு இனமும்
தன் இனம் நசுக்கப்படுகையில்
இவ்வளவு கடிதங்களை
எழுதித் தள்ளியிருக்காது.

உலகின் எந்த ஒரு இனமும்
தான் அழித்தொழிக்கப்படுகையில்   
இவ்வளவு நீண்ட  உண்ணாவிரதத்தை  
நிகழ்த்திக் காட்டி இருக்காது.

உலகில் எந்த ஒரு இனமும்
தன் இனம் துடைத்தெறியப்பட்டதை        
இவ்வளவு பெரிய மாநாடு   
நடத்திக் கொண்டாடி இருக்காது.  
 
உலகின் எந்த ஒரு இனமும் 
தன் இனத்தைத் தானேக் கொன்று  
சடலத்தின் சட்டைப் பையில் 
காசு தேடி இருக்காது.                                                                                                                                                                                                                                                             
                           -  அகரத்தான்  

No comments:

Post a Comment