தஞ்சாவூர், செப். 10-
சோனியா கருணை காட்டியதால் நளினிக்கு கருணாநிதியும் கருணை காட்டினார் என்று பழ. நெடுமாறன் கூறினார்.
தஞ்சாவூரில் நடந்த மரண தண்டனைக்கு எதிரான கருத்தரங்கில் பழ.நெடுமாறன் பேசியதாவது:-
வரலாற்றுக்கு காலத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே மரண தண்டனை இருந்துள்ளது. ஏசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதும், சாக்ரடீஸ் விசம் குடித்து இறக்க நேர்ந்ததும் மரண தண்டனை இருந்ததால்தான். தமிழ்நாட்டில் மரண தண்டனையே தேவையில்லை என்றுதான் கோருகிறோம். உலகில் 147 நாடுகளில் 117 நாடுகளில் மரண தண்டனை அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. மனித நேயம் உள்ளவர்கள் மரண தண்டனையை ஏற்க மாட்டார்கள். குற்றம் செய்தவர்களைச் சிறைக்கு அனுப்புவதே, அவர்களைத் திருத்தத்தானே ஒழிய, அவர்களைக் கொல்வதற்கு அல்ல!
உலக வரலாற்றிலேயே ஒரே வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது என்பது ராஜீவ் கொலை வழக்கில்தான். மகாத்மா காந்தி கொலை வழக்கு வெளிப்படையாக நடந்தது. இந்திரா கொலை குறித்த வழக்கு பகிரங்கமாக நடத்தப்பட்டது. ஆனால், ராஜீவ் கொலை வழக்கு மட்டும், கேமிரா முன் நான்கு சுவர்களுக்குள் நடந்தது. வழக்கறிஞர்களுக்குக் கூட தெரியாமல் அப்படி ரகசியமாக இந்த வழக்கு விசாரணை நடைபெற வேண்டிய உள்நோக்கம் என்ன. இவர்கள் மட்டும் ரகசியமாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது.
உச்ச நீதிமன்றம் சென்று நாம் 22 பேரின் உயிரைக் காப்பாற்றினோம். மீதமுள்ள 4 பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது. இதில் நீதிபதிகளின் தீர்ப்பே வேறுபட்டது. ஆனால் நீதி வேறுபடக் கூடாது. இந்த விசயத்தில் பல்வேறு நிலைகளில் நிராகரிக்கப்பட்டாலும் அதை சட்டமன்றத்தில் தீர்மானம் மூலம் பெறும் உரிமையை அதிகாரத்தை மாநில முதல்வருக்குப் பெற்றுக் கொடுத்தோம். இதுதொடர்பாக நாங்கள் ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று, அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் சென்று மனு கொடுத்தோம். ஆனால், நளினி மீது சோனியா கருணை காட்டியதால், கருணாநிதியும் கருணை காட்டினார். மற்றவர்களை விட்டுவிட்டார்.
குடியரசுத் தலைவர் நிராகரித்தாலும் மரண தண்டனையை நிறைவேற்றாமல் நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. இந்த விவகாரத்தில் சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்த முதல்வரை பாராட்டுகிறேன். அதேநேரம் அமைச்சரவையைக் கூட்டி மரண தண்டனை பெற்றவர்களுக்கு வாழ வழி செய்ய வேண்டும். மரண தண்டனையை அடியோடு ஒழிக்க வேண்டும். அரசியல் சட்டத்தில் இருந்து மரண தண்டனை என்பதையே நீக்க வேண்டும். இவ்வாறு பழ.நெடுமாறன் பேசினார்.
No comments:
Post a Comment