Total Pageviews

Tuesday, 8 November 2011

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்யாவின் மிக உயர்ந்த விருது அறிவிப்பு!

Russia to present 'Order of Friendship' award to Tamil writer D. Jayakanthan - Tamilnadu News Headlines in Tamil


எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய நாட்டின் மிக உயரிய நட்புறவு விருது (ஆர்டர் ஆஃப் ஃபிரண்ட்ஷிப்) வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதைப் பெறும் முதல் இந்திய எழுத்தாளர் ஜெயகாந்தன். இதற்கு முன்னதாக, பிரபல திரைப்பட இயக்குநர் மிர்ணாள் சென்னுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ஜெயகாந்தனுக்கு இந்த விருது வழங்குவது குறித்து ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் பிறப்பித்த உத்தரவின் நகலை இந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் நிகோலாய் ஏ லிஸ்தபதோவ், ஜெயகாந்தனிடம் சென்னையில் திங்கள்கிழமை வழங்கினார்.
இது குறித்து அவர் கூறுகையில், "ரஷ்யாவின் உண்மையான நண்பர் ஜெயகாந்தனுக்கு விருது வழங்குவதில் பெருமையாக உள்ளது. இந்திய - ரஷ்ய உறவு வலுவாக அமைய ஜெயகாந்தன் ஆற்றிய பங்கு அபாரமானது.
ரஷ்ய எழுத்தாளர் புஷ்கினின் எழுத்துக்களை தமிழில் அவர் மொழிபெயர்த்துள்ளார். அதேபோல, அவரது இலக்கியப் படைப்புகள் ரஷ்ய மொழியிலும் உக்ரேனிய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தனது பணியினை சிறப்பாக ஆற்ற ஜெயகாந்தனுக்கு இந்த விருது ஊக்கத்தைக் கொடுக்கும்," என்றார்.
இந்த நட்புறவு விருது வழங்கும் விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்தியாவுக்கான ரஷ்ய தூதர், ரஷ்ய அதிபரின் தூதுக் குழுவினர் விழாவில் பங்கேற்க உள்ளனர்.
இந்தோ-ரஷ்ய கலாசார மற்றும் நட்புறவு மையத்தின் தலைவராக ஜெயகாந்தன் உள்ளார். இவர் தனது எழுத்துப் பணியோடு இந்திய, ரஷ்ய நாடுகளிடையே உறவை வளர்க்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அவரது நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட 'உன்னைப் போல் ஒருவன்' (1965) திரைப்படம் ரஷ்ய அதிபர் விருதைப் பெற்றது. இந்தோ-ரஷ்ய கலாச்சார மற்றும் நட்புறவு மையத்தை அவர் 2006-ல் தொடங்கினார். தொடர்ந்து ரஷ்யாவுடன் நல்லுறவைப் பேணி வருகிறார்.

No comments:

Post a Comment