ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈழத்தமிழர் உரிமைகாக்க, தமிழ் ஈழம் விடியல் காண, மூன்று தமிழர் உயிரைக் காக்க, கோவை மாநகரில், சிதம்பரம் பூங்காவில் வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு, செக்கு இழுத்த செம்மலின் புகழ்பாடும் திடலில் நடக்கிறது.
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர், பழ. நெடுமாறன் தலைமை தாங்குகிறார். முத்துக்குமார், செங்கொடி, உருவப் படங்கள் திறக்கப்படுகின்றன. ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்து வரும் அமெரிக்க எழுத்தாளர் ரான்ரைட்னர், ஐக்கிய நாடு அவையின் வல்லுநர்குழு அறிக்கையை வெளியிடுகிறார். அதனை நான் (வைகோ) பெற்றுக் கொள்கின்றேன்.
லட்சக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்த கொலைகாரப் பாவி ராஜபக்சேவுக்காக வரிந்து கட்டிக்கொண்டு இந்திய அரசு வேலை செய்கின்றது. அதனால்தான், 2013-ம் ஆண்டு இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த வேண்டும் என்று இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய் கூறியுள்ளார்.
ராஜபக்சே அரசை அனைத்து உலக குற்றவியல் நீதிமன்ற கூண்டில் நிறுத்த, கோவையில் சூளுரைப்போம். தூங்காதே, இன்னுமா உறக்கம்? விழித்து எழு, வீறுகொண்டு எழு, தமிழ்க் குலத்தின் உரிமை காக்க, தோள் தட்டிடப் புறப்படு கோவை நோக்கி என, தியாகிகள் சிந்திய செங்குருதி அழைக்கின்றது.
கோவையில் நடக்கும் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கு ஏற்பது, நமது முழு முதல் கடமை. அணி திரண்டு வாருங்கள் தமிழர்களே என அழைக்கின்றேன். மரண இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் தவிக்கும் ஈழத் தமிழருக்கு வாழ்வுரிமை வெளிச்சத்தைக் காட்ட கோவையில் திரண்டிடுவோம்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
No comments:
Post a Comment