Total Pageviews

Sunday, 8 July 2012

டூரிங் டாக்கீசு

அது ஒரு கனாக்காலம். 

மழைக் காலங்களில் 
நனையாமல் விளையாட 
தட்டாங் கல், தாயக்கரம், 
பல்லாங்குழி, பரமபதம், 
ஆடு, புலி ஆட்டம், கிளித்தட்டு. 

வெயிற் காலங்களில் 
வெளியில் ஓடி விளையாட 
கில்லி, அணிலா ஆடா, 
நீச்சல், நொண்டி ஆட்டம், 
கபடி, கண்ணாமூச்சி, 
உப்பு மூட்டை, எறிபந்து, 
சில்லி ஆட்டம், கோலி ஆட்டம். 

ஆண்டுக்கு ஒருமுறை 
திருவிழாவில் தெருக்கூத்தும், நாடகமும் 
கோலோச்சுனக் காலத்துல 
தினசரிப் பொழுதுபோக்குக்கு டூரிங் டாக்கீசு. 

அப்பன், ஆத்தா அடிச்சுட்டாங்கன்னு 
ஆத்த மாட்டாம  அழுதவங்களும், 
புருஷன், பொஞ்சாதிக்குள்ள 
பொணக்கிருந்தாலும், 
சேக்காளிகளுக்குள்ள 
சண்டை, சச்சரவுன்னாலும் 

சாயந்திரம் ஆகட்டும். 
சினிமாவுக்குப் போகலாம்னா 
பகையெல்லாம் பறந்து போகும். 
பாசம் தானாக் கூடிப் போகும். 

வறுத்த வேர்க்கடலை, 
நடமாடும் சுக்குத்தண்ணீ, 
சினிமாப் பாட்டுப் புத்தகம், 
சீமெண்ணத் திரிவிளக்கு, 
பார்வையாளர் மனசு ஊஞ்சலாட  
ரங்கர்க் கட்டை. 

பனைமர உச்சியிலிருந்து 
கூம்பு ஒலிபெருக்கியில  
மருதமலை முருகனும், 
வினைதீர்த்த விநாயகனும் 
கூப்பாடு போடுவாங்க. 

அப்போதெல்லாம் 
கம்பீரம் காட்டி நிற்கும் 
கருத்த யானை டூரிங் டாக்கீசு.  

ராத்திரி முதலாம் ஆட்டத்துக்கு 
வண்டி கட்டி வந்தவங்க 
வாத்தியார நம்பியாரு அடிக்கையில 
மண்ணாப் போயிடுவான்னு 
மண்ண வாரித் தூத்துரப்ப 
முன்னால உக்காந்திருந்து 
நான் மண்ணாப் போயிருக்கேன். 

மதுரை வீரனோட 
மாறு கை, மாறு கால் வாங்குறப்ப 
வாயிலும், வயித்திலும் அடிச்சு 
சனங்க அழுதரற்றுகையில 
நானும் கண் கலங்கியிருக்கேன். 

பாசமலர் பார்த்து 
சனங்களோட சேர்ந்தழுது 
கோவைப் பழம் கணக்கா 
கண்கள் செவந்திருக்கேன். 

அதே கண்கள் 
அதே இடம் 
அசையாம கொள்ளாம திகிலடிச்சு 
ஆணி அடிச்சாப்புல 
அப்படியே அமர்ந்திருக்கிறேன். 

செகன்மோகினியக் கண்டுட்டு 
தனியே மூத்திரம் பெய்ய பயந்து 
உக்கார்ந்த இடத்துலயே 
பூனை போல குழிபறிச்சு 
உச்சா போயிருக்கேன். 

சல்லிக்கட்டுக் காளையெல்லாம் 
துள்ளிக்கிட்டு ஆடுற 
அலங்காநல்லூர் வாடிவாசலுல 
காளையனோட சேக்காலியா 
முரட்டுக் காளையடக்க 
முண்டாத் தட்டியிருக்கேன். 

ஆறாப்பு படிக்கையில 
சூரிக்கோனார் உசுரிழந்ததா பொய் சொல்லி 
உசுருள்ளவரை உஷாவைப் பார்த்துட்டு  
உசுரு போக உதைவாங்குன அறிவழகனை 
பெருமித்தோடப் பார்த்திருக்கேன். 

முள்ளும் மலருமான 
காளியோடவும், வள்ளியோடவும் 
மலை, காடு மேடெல்லாம் 
வளைஞ்சு நெளிஞ்சு 
அலைஞ்சு திரிஞ்சிருக்கேன்.  

டவுசருக்கும், 
முழுக்கால் சட்டைக்குமான 
இடைப்பட்ட அரும்புமீசை 
அபாய வயசுல 
மௌனமான நேரத்துல 
சலங்கை ஒலி கேட்டு நெகிழ்ந்திருக்கேன். 

பதினாறு வயதினிலே 
ஒருக்களிச்சு ஒயிலாப் படுத்த மயிலு 
உள்ளுக்குள்ள உறங்கிட்டிருந்த சைத்தானை 
உசுப்பி விட்டுட்டா. 

நாகரிகம் எட்டிப் பார்க்கா 
மலைநாட்டு கிராமத்துல 
வட்டுக் கருப்பட்டியும், 
வாசமுள்ள ரோசாவுமாயிருந்த 
அப்புராணி செம்பட்டையோட
குடும்பச் சிதைவைக் கண்டு 
அதிர்ந்து போயிருக்கேன். 


ஊரடங்கும் சாமத்துல 
மூத்த தலைமுறை கண்ணுலப் படாம 
பலானப் படம் இரண்டாம் ஆட்டத்துக்கு 
முள்ளுப் புதரோரம் மூத்திர நாத்தத்துல 
பதுங்கிப் பாய்ந்து சீட்டு வாங்கி 

மண்ணைக் குவிச்சு வச்சு 
மலைமேலக் குமரனைப் போலமர்ந்து 
பெண்மையின் 
வெயிற் படாத அவயமெல்லாம் 
வெட்ட வெளிச்சத்துல 
பேருருவாப் பார்த்துப் பூத்திருக்கேன்.  

கொல்லிமலை அடிவாரம் 
கோம்பைக்காட்டுல வெறகெடுத்ததுக்கு 
அம்மா கொடுத்த அம்பது பைசா 
தங்கைக்காக வாழ்ந்து மடிஞ்ச 
தாடிக்கார அண்ணனை 
அடையாளம் காட்டுனுச்சு. 
 
மண்வாசனை மணத்தோட  
மாமன் மேல உசுரவச்சு 
மாமாங்கம் காத்திருந்து 
சருகா உதிர்ந்துபோன 
முத்துப்பேச்சிக் காதலுக்காக 
மாஞ்சு அழுதிருக்கேன்.  

கடலைக்கா தொலியுளிச்சு 
கைக்கு கெடச்ச காசுல 
ஓடுற தண்ணியில ஒரசுன 
சந்தன வாசம் புடிச்சிருக்கேன். 

அலிபாபாவோட அண்ணன் 
பொக்கிசங்களை வாரிச் சுருட்டையில 
கொள்ளைக்குப் போயிருந்த நாற்பது திருடர்களும் 
குகைக்குள்ள திரும்புறப்ப 
சூறைக் காத்துல இடுப்பொடிஞ்சு 
விழுந்துடுச்சு டூரிங் டாக்கீசு. 

இளைய தலைமுறை தலையெடுக்கிறப்ப 
மூத்த தலைமுறை மதிப்பிழந்து 
செல்லாக் காசாவது மாதிரி 

கால ஓட்டத்துல 
எங்க கதைசொல்லிகள் எல்லாம் 
எழவுப் போட்டியில 
கதைப் பார்க்கத் தொடங்குனதும் 
டூரிங் டாக்கீசு காணாமல் போயிடுச்சு. 

சுவரொட்டி ஓட்டுன இரட்டைத் தலையன் 
சரக்குந்துக் கிளீனராகவும், 

சீட்டுக் கிழிச்சிட்டிருந்த குறவன் 
உதிரிப் பூ விக்கவும், 

மொதலாளியும், குத்தகைதாரரும் 
மரவள்ளிக் கிழங்கு தரகிலும், 
கட்டிட ஒப்பந்தத்திலும் 
வண்டியை ஓட்டுறாங்க. 

சாய்ந்துகொள்ள தோள் கொடுத்து 
எவ்வளவோ சுகங்களை 
எவ்வளவோ துக்கங்களை 
எவ்வளவோ ஆறுதல்களை 
எவ்வளவோ அனுபவங்களை 
எவ்வளவோ பாடல்களை 
எவ்வளவோ பாடங்களை 
எவ்வளவோ கதைகளை 
எவ்வளவோ வாழ்க்கைகளை 
வாரிக் கொடுத்து 
எங்களைப் பிரமிக்கச் செய்த டூரிங் டாக்கீசு, 

அரிசி ஆலையாகவும், 
கல்யாண மண்டபமாகவும் உருமாற 
இடிபடுறத இடிஞ்சுபோய் 
இதயத்துல ரத்தம் கசிய 
சொல்லாத சோகத்தோட 

தொண்டைக்குள்ள 
எலும்பு சிக்குன நாயைப் போல 
விக்கிச்சு வேடிக்கைப் பாக்குறேன். 
-------------------------------------------------------------------------------------- 






No comments:

Post a Comment