நடிகவேள் எம்.ஆர்.ராதா,
எந்த அதிகாரங்களைக் கண்டும் அஞ்சாதவர். தன் மனதில் பட்டதைச் சொல்லும் சுபாவத்துக்குச் சொந்தக்காரர்.
அவர் இம்பாலா காரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஊர்வலம் வந்த கதை பலருக்கும் தெரியும். அதே இம்பாலா காரை, அப்போதைய குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் சென்னை வந்தபோது, அவரை அழைத்து வருவதற்காக எம்.ஆர்.ராதாவிடம் சில அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள். 'இந்த ராதாகிருஷ்ணன் போவதற்காகத்தான் கார். அந்த ராதாகிருஷ்ணனுக்காக இல்லை' என்று துணிச்சலாக மறுத்தவர்.
அண்ணா, பெரியாரைவிட்டுப் பிரிந்தபோது 'அண்ணாவின் அவசரப் புத்தி' என்று புத்தகம் எழுதி, அவரிடமே கொண்டுபோய்க் கொடுத்தார். 'நீங்களா எழுதினீர்கள்?' என்று அண்ணா கேட்க, 'எனக்குத்தான் எழுதத் தெரியாதே, நான் சொல்லச் சொல்ல எழுதினது. யார் எழுதினால் என்ன?' என்றார்.
அந்தக் காலகட்டத்தில் கட்சியில் இருந்தவர்களுக்கு ஒளி வட்டம் சூட்டப்படுவதைக் கடுமையாக எதிர்த்தவர் ராதா. அண்ணா, திராவிடர் கழகத்தில் 'தளபதி' எனத் தொண்டர்களால் அழைக்கப்பட்டவர். ஒருமுறை அவர் நாடகத்துக்கு அண்ணா வந்திருந்தபோது, மேக்கப் ரூமில் இருந்த ராதாவிடம் 'தளபதி வந்திருக்கிறார்' என்று அவசர அவசரமாகச் சொல்லியிருக் கிறார்கள். 'தளபதி குதிரையை எங்கே நிறுத்திட்டு வந்திருக்கார்?' என்று நக்கலாகக் கேட்டாராம் ராதா.
ஓசியில் நாடகம் பார்க்கும் வி.ஐ.பி-க்களையும், 'காசு கொடுத்து டிக்கெட் வாங்கினவன்லாம் தரையிலே உட்கார்ந்திருக்கான். ஓசியிலே வந்தவன்லாம் சேர்ல உட்காந்திருக்கான்' என்று நாடக மேடையிலேயே கலாய்ப்பாராம்.
நடிகவேளிடம் இருந்த துணிச்சலும், அதிகாரங்களுக்காக வளையாத தன்மையும், ஆச்சர்யதக்கது ...!!!"
No comments:
Post a Comment