Total Pageviews

Thursday, 15 December 2011

ஒரு வரலாற்று தருணம்




வரலாற்றில் சில தருணங்கள் விரும்பத்தக்கதாகவும், சில தருணங்கள் விரும்பத்தகாததாகவும் மக்களால் உற்று நோக்கப்படுகின்றன. முக்கியமான தருணங்களை மக்கள் கொண்டாட்டங்களின் வழி வரவேற்கிறார்கள். விரும்பத்தகாத நிகழ்வுகளைக் கண்டு கொதிப்படைந்து உள்ளுக்குள் எரிமலைகளாக குமுறிக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தோமானால் இப்படியான நிகழ்வுகளின் தொகுப்பாகவே அது இருக்கும். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சனத்திரளை ஒருங்கிணைத்து போராட்ட களத்திற்கு அழைத்து வருபவர்களை அதிகாரத்திலிருப்பவர்கள் கைது செய்து சிறைக் கொட்டடியில் அடைத்து போராட்ட உணர்வை நீர்த்துப் போக வைக்க முயலும்போது, அத்தகைய மக்கள் விரோதச் செயல்பாடுகள் சமூகத்தால் கண்டிக்கப் படக்கூடியதாகவும், கடும் எதிர்வினைகளை உண்டாக்கக்கூடியதாகவும் வரலாற்றை திருத்தி எழுதக் கூடியனவாகவும் உருமாற்றம் கொள்கின்றன. சிலவேளைகளில் இத்தகைய கொண்டாட்டங்கள் மக்களை பொதுவெளிக்கு கொண்டு வராவிட்டாலும் கூட உள்ளுக்குள்ளேயே மவுனமாக ஆசுவாசப் பெருமூச்சு விட வைப்பதாகவும் இருக்கின்றன.  

                           தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கையைக் கண்டித்து கறுப்பின மக்கள் தலைவர் நெல்சன் மண்டேலா கறுப்பின மக்களைத் திரட்டி வெள்ளை அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி நெருக்குதலை கொடுத்தபோது, வெள்ளை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டபோது ஓட்டு மொத்த உலக நாடுகளும் பதறின. உலக நாடுகள் எல்லாம் தென்னாப்பிரிக்காவைத் தனிமைப் படுத்தியதன் வாயிலாக அந்நாடு கால்நூற்றாண்டு சிறைவாசத்திற்குப் பிறகு மண்டேலா அவர்களை விடுதலை செய்தது. சிறைக் கொட்டடியிலிருந்து வெளியே வந்தவுடன் தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராகப் பதவியேற்ற போது வரலாறு திருத்தி எழுதப்பட்டது. அப்போது அவருக்குப் பின்னால் மக்கள் இருந்தார்கள். 

                         அயல்நாடு வாழ் இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தனது சாத்தானின் கவிதைகளில் இசுலாமிய மதக் கட்டுப்பாடுகளை கேள்விக்குட்படுத்தி கட்டுடைப்பு செய்தபோது, உலகம் முழுதும் வாழும் தீவிர அடிப்படைவாதிகளையும் கோபமூட்டுவதாக இருந்தது. மத அடிப்படிவாதிகள் அவரை கைது செய்து இசுலாமிய சட்டப்படி தண்டிக்கத் துடித்தார்கள். இரானின் அயத்துல்லா கோமேனி அவர்கள் அவருடைய தலையை வெட்டி எடுத்து வருபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்குவதாக பத்வா அறிவித்தார். அதன் பிறகு சல்மான் ருஷ்டி பொது நிகழ்ச்சிகளிலும், வெளி உலகத்திலும் வெளிவராமல் இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்து கமுக்க வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவருக்குப் பின்னால் மக்களும், கலை இலக்கியவாதிகளும் இருந்தார்கள். 

                         பன்னாட்டு முதலைகளுக்கு சொக்கபூமியான உலகின் மிகப்பெரிய சனநாயாகம் தந்தேவாடா வனப்பகுதியின் பூர்வப் பழங்குடிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை செய்து வருபவரும், மனித உரிமைப் போராளியுமான பினாயக்சென் அவர்களை தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவான துண்டறிக்கைகளையும், சில புத்தகங்களையும் வைத்திருந்ததாக குற்றம் சாட்டி கைது செய்து பிணையில் வர முடியாத பிரிவுகளின் கீழ் சிறைக் கொட்டடியில் அடித்தபோது, உலகம் முழுதும் வாழும் நோபெல் பரிசு பெற்ற மனிதை உரிமை செயற்பாட்டாளர்கள் அவரை விடுதலை செய்யச் சொல்லி தங்களின் கண்டனங்களின் வாயிலாக புற அழுத்தங்களை கொடுத்ததாலும், மக்கள் வீத்துக்கு வந்து போராடியதாலும் வேறு வழியின்றி பிணையில் விடுதலை செய்யப்பட்டார். சிறை மீண்ட மனித உரிமைப் போராளி மக்கள் சேவையை தொடருகிறார். அவருக்குப் பின்னால் மக்களும், மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் இருந்தனர். 

                       சமூக சேவகரும், புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளருமான அருந்ததிராய் அவர்கள் காஷ்மீர மக்கள் குறித்த ஒரு கருத்தை முன் வைத்தபோது அது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. (உலகிலேயே அதிக ராணுவ நெருக்கடி மிகுந்த நகரம் காஷ்மீர் தான். 10 இலட்சம் மக்கள் வசிக்கும் மிகக்குறுகிய நிலப்பரப்பிற்குள் 7 இலட்சம் ராணுவவீரர்கள் நிலை கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு மக்களும் ராணுவ வீரர்களின் கை கவுட்டு சந்துக்குள் நுழைந்து செல்வதைப் போல் அவர்களுடைய இயல்பு வாழ்க்கை நடக்கிறது என்பதை கவனிக்க.) இந்தியாவின் தேசப் பற்றாளர்கள் என சொல்லிக்கொண்டு வயிறு பிழைத்தவர்களும், மதத்தை அடிப்படையாகக் கொண்டு கட்சி நடத்தியவர்களும் அவரை தேசத்துரோகி என தூற்றி அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தினார்கள். அவர் தன் கருத்துகளில் இருந்து பின் வாங்கவே இல்லை. வழக்கு தொடுத்து கைது செய்யவும் முயற்சித்தார்கள். உலகம் முழுவதும் இருந்து சமூக சேவகர்கள் கண்டனக் குரல்களை எழுப்பினர். அதனால் சனநாயகம் தன் வாலை சுருட்டிக் கொண்டது. அப்போது அவர் பின்னால் சமூக ஆர்வலர்களும், நடுநிலை மக்களும் இருந்தனர்.

                           காஷ்மீரத்திலும், வடகிழக்கு மாநிலங்களிலும் ஆயுதப்படை சிறப்புக்காவல் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி  மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். காந்தி தேசம் தன் பிள்ளைகளின் இயல்பு வாழ்க்கையை பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொன்று வீசியபோது, இளைஞர்களை வீடு புகுந்து கொன்று வீசியபோது,  மணிப்பூர் மாநிலத்தில் எந்த அரசியல் பின்புலமுமில்லாமல் தனியொரு பெண்ணாக மேற்படி ஆயுதப்படை சிறப்பு காவல் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி காந்தியவழியில் காந்தி தேசத்தை வலியுறுத்தி தனது 28 வது வயதில் உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கினார். இன்று அந்த உண்ணாநிலை போராட்டம் பதினோரு ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவருடைய போராட்டம் தீவிரமடைந்து கவன ஈர்ப்பை ஏற்படுத்துவதைக் கண்டு அவரைக் கைது செய்து முடக்க நினைத்தபோது அவர் முன்பைக் காட்டிலும் தீவிரம் காட்டினார். அப்போது அவருக்குப் பின்னால் மக்கள் இருந்தனர்.

                            மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக சனநாயகத்தை வலியுறுத்தி போராடும் எதிர்க் கட்சி தலைவி ஆங் சாங் சூயி என்பவரின் பின் திரளும் மக்கள் எழுச்சி கண்டு ராணுவ ஆட்சியாளர்கள் அவரைக் கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்தனர். 20 ஆண்டுகளாக சிறைக்காவலில் இருக்கும் அவரை பத்திரிக்கையாளர்களோ, மக்களோ, கட்சிப் பிரதிநிதிகளோ சந்திக்க விடாமல் தடை செய்தனர். உலக நாடுகள் எவ்வளவோ வலியுறுத்தியும் ராணுவ ஆட்சியாளர்கள் கேட்பதை இல்லை. இருந்தும் அந்த இரும்புப் பெண்மணி தன் உறுதி குலையவில்லை.  அப்போது அவர் பின்னால் மக்களும், சர்வ தேசமும் இருந்தது.

                            தஸ்லிமா நசுருதீன் என்ற வங்கதேச பெண் எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை போன்றே இசுலாமிய மதக்கட்டுப்பாடுகளை கேள்விக்குட்படுத்தும் விதமாக கதை எழுதியதால், அவருக்கு எதிராக அந்நாட்டு அரசாலும், மதவாதிகளாலும் கடுமையான எச்சரிக்கை விடப்பட்டு அவருக்கு எதிராக பத்வா அறிவிக்கப்பட்டு தேடப்பட்டார். அவர் வங்கதேசத்திலிருந்து தப்பி வந்து இந்தியாவில் அடைக்கலம் கோரி ஓராண்டுகாலம் வரை இருந்தவரை இந்திய ஆட்சியாளர்கள் இந்தியாவை விட்டு வெளியேற்றியபோது, அவர் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் சென்று தஞ்சம் புகுந்தார். அப்போது அவர்கள் பின்னால் கலை இலக்கியவாதிகளும், மக்களும் இருந்தனர்.

                           மும்பையைச் சேர்ந்த பெருமதிப்பிற்குரிய எம்.எப். ஹுசைன் என்ற உலகப்புகழ் ஓவியக் கலைஞர் தன்னுடைய அசாதாரணக் கோட்டோவியங்களின் வாயிலாக காண்போரின் மனங்களில் வித விதமான சித்திரங்களை வரைந்தவர். இவர் திரைப்படத் துறையிலும் கால் பதித்தவர். இசுலாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் உற்ற தோழனாக இருந்தவர். அவருடைய காளிதேவி குறித்த நிர்வாணச் சித்திரம் அனைத்து ஓவியர்களாலும், கலாரசனை மிக்கவர்களாலும் பாராட்டை குவித்தது. நிர்வாணம் என்பது சிற்பக்கலை, ஓவியக்கலையில் புனிதமான அங்கம் என்பது எத்தனை பேருக்கு சொல்லி புரிய வைக்க முடியும்? அன்று சாதியையும், மதத்தையும் வைத்து வயிறு பிழைப்போரின் எண்ணிக்கை மிக சொற்ப அளவிலேயே இருந்திருக்கக் கூடும். (அதற்கு முந்தைய காலகட்டங்களில் பெரியார் ஐயா அவர்கள் பிள்ளையார் சிலை உடைப்பை நிகழ்த்த முடிந்தது. இன்று அவர் உயிரோடு இருந்தாலும் சிலை உடைப்பை நிகழ்த்தாமல் இருக்க மாட்டார். இப்போது மத அடிப்படை வாதிகளின் எதிர்ப்பை அதிகம் சந்திக்க வேண்டி இருந்திருக்கும். இன்று பெரியாரின் தொண்டன் என சொல்லிக் கொண்டவர்கள் எல்லாம் மஞ்சள் துண்டுக்குள் புதைந்து விட்டனர்.) 25 ஆண்டுகளுக்கு முன் வரைந்து பாராட்டைப் பெற்ற சித்திரம் இன்று சர்ச்சையாக்கப்பட்டு மதவாதிகளைத் திருப்திப் படுத்த, காந்திகள் அவரை இந்தியாவிலிருந்து வெளியேறச் சொல்லி கட்டாயப்படுத்தப் பட்டனர். வழக்கம்போல, இங்கிலாந்து நாடு அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. தன்னுடைய இறுதிக் காலத்தை மனம் வெதும்பிய நிலையில் கழித்த அந்த உலகப் புகழ் பெற்ற கலைஞன் லண்டனிலேயே தன்னுடைய இறுதி மூச்சை இழந்தார். இறந்தபோது அவரை நல்லடக்கம் செய்ய தயாராக இருப்பதாக இந்திய ஆட்சியாளர்கள் உரைத்தபோது, அன்னாரின் விருப்பப்படி அவருடைய உடல் லண்டன் நகரிலேயே அடக்கம் செய்யப்பட்டது. எப்போதும் அவருக்குப் பின்னால் மக்களும், கலைஞர்களும், சமூகமும் இருந்தது.

                             தமிழீழத்தில் அமைதிப்படை வீற்றிருந்த காலத்தில் போர் நிறுத்தம் அமலில் இருந்த காலத்தில் சர்வதேச கடல் எல்லையில் நிராயுதபாணியாக படகில் சென்று கொண்டிருந்த பன்னிரு தமிழீழப் போராளித் தளபதிகளை இந்திய அமைதிப்படை கைது செய்தனர். தகவலறிந்த போராளித் தலைவர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் அவர்களுடைய வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, சிங்கள ராணுவம் வசம் ஒப்படைக்க கொழும்பு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டனர். போராளிகளை காக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணான நிலையில், அரசியற் செயற்பாட்டாளர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கனத்த இதயத்தோடு அவர்களுக்கு குப்பி கொடுத்து தமிழீழ தேசத்திற்கு வித்தாகச் சொன்னார். அந்த தளபதிகளும் தங்கள் இன்னுயிரை தமிழீழத்திற்கு உரமாக்கினர். அப்போது மட்டுமல்ல, தமிழீழ வரலாற்றில் எப்போதும் அந்த மாவீரர்களுக்கு தனித்த இடமுண்டு.

                             தமிழர் தலைவர் பெரியார் சமூக நீதி காக்கவும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், தீண்டாமைக்கு எதிராகவும், பெண்ணடிமைக்கு எதிராகவும், பெண் விடுதலையை வலியுறுத்தியும், மது விளக்கை வலியுறுத்தியும், தலித் மக்களுக்கு ஆதரவாக கோவில் நுழைவுப் போராட்டங்களையும், பொதுக் கிணற்றில் குடிநீர் எடுக்க வேண்டியும், கடவுள், சாதி, மூடநம்பிக்கைக்கு எதிராக மக்கள் திரளை விழிப்புணர்வூட்டவும், மக்கள் விரோத அரசியலமைப்பு சட்டங்களை நீக்கக் கோரியும், சுதந்திரத்தின் பெயரால் மக்களை மகுடிக்கு மயங்கும் பாம்புகளாய் ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் காந்திய பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும் எண்ணற்ற போராட்டங்களை முன்னெடுத்து தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த உன்னத மனிதர். அவர் அன்று கொளுத்திய விழிப்புணர்வுத் தீ மக்களின் மனங்களில் கனன்று எரிவதாலேயே இன்றும் தமிழகத்தில் போலி காந்தியவாதிகளின் காங்கிரசும், மதவாதிகளும் காலூன்ற முடியவில்லை என்பதை மனதில் கொள்க. எப்போதும் அவர் பின்னால் மக்கள் இருக்கிறார்கள்.

                             அண்மைக்காலமாக காந்தி தேசத்தில் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகளை கண்ணுறுகையில், இந்த அயோக்கியர்கள் வாழும் சம காலத்தில் ஏன் நாம் பிறந்தோம் என்ற குற்ற உணர்ச்சியையே ஏற்படுத்துகிறார்கள். நில அபகரிப்பு வழக்கு, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கு, பாலியல் வழக்கு, அரசு பொதுத்துறை நிறுவனச் சொத்துக்களை அதிகாரத்தைப் பயன்படுத்தி கையகப் படுத்துதல், சுரங்க ஊழல், தொலைத்தொடர்பு ஊழல், ஆதர்ஷ் ஊழல், மட்டைப் பந்துப் போட்டியில் ஊழல், சவப்பெட்டி ஊழல், இலவச வண்ணத் தொலைகாட்சி ஊழல், சுடுகாட்டு ஊழல், இலவச செருப்பு ஊழல், மணற்கொள்ளை, கல்வி நிறுவன மோசடிக்கு உடந்தையாக இருந்து அங்கீகாரம் கொடுத்தது, ராணுவ ஒதுக்கீட்டில் ஊழல், அடுத்தவர் சொத்தை அபகரிக்க நினைத்து கொலை மிரட்டல் விடுத்தது, தான் எடுத்துக்கொண்ட சத்திய பிரமாணத்திற்கு எதிராகவே நடந்து கொள்ளுதல், பன்னாட்டு முதலைகளோடு இணைந்து கொள்ளை இலாபநீட்ட அரசை இழப்பிற்கு உள்ளாக்குதல் போன்ற அயோக்கியத்தனங்களை செய்ததற்காக கைது செயாப்படும் மக்கள் காவலர்கள் நாட்டிற்கு சுதந்திரம் வாங்க தியாகம் செய்த பேராண்மையாளரைப் போல கொஞ்சம் கூட வெட்கப்படாமல் மக்களையும், ஊடகங்களையும் சந்திக்கும்போது அவர்களுக்கும் சேர்த்து நாம் தான் வெட்கப் படவேண்டியுள்ளது.

                             அண்மையில் ஒரு கட்சியின் மகளிரணித் தலைவியும், பெண்ணியப் போராளியும், கலை இலக்கியத்தைக் கரைத்துக் குடித்தவரும், நாட்டுப்புற இசைக் கலைஞர்களைச் சங்கமிக்க வைப்பவரும், கருத்து சுதந்திரத்தை மீட்டு எடுப்பவருமான அவரைப் பற்றி தனியாக சொல்ல ஏதுமில்லை. ஊரும், உலகமும் அறிந்த செய்தி தான். உலகின் இரண்டாவது இமாலய ஊழலான இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் புரிந்து அந்தக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, ஆறுமாத சிறைவாசம் முடித்து வெளி உலகை காண வெட்கப்படாமல் வரும் அந்த தமிழச்சியை வரவேற்க அவர் சார்ந்த கட்சியின் தலைமையும், தொண்டரடி பொடிகளும் தாரை, தப்பட்டைகள், செண்டை மேளங்கள் முழங்க சென்னை விமான நிலையத்திலிருந்து பல மைல் தொலைவிற்கு கட்சி பதாகைகளுடன் வேலை வெட்டியற்ற வேட்டிகள் மதுப்புட்டிக்காகவும், சோற்றுப் போட்டலத்திர்காகவும், காந்தி நாட்டுக்காகவும் வெயிலில் நின்று கோசம் போட்டு தங்கள் தலைவர்களின் இந்த செயற்கரிய செயலை அங்கீகரிக்கிறார்கள். உலகம் இதுவரை பல ஊழல்களை சந்தித்து இருக்கலாம். ஆனால், உலகிலேயே முதன் முறையாக கையூட்டுத் தொகையை வங்கி வரைவோலையாக பெற்றுக் கொண்ட உலகின் மிகத் துணிச்சலான பெண்மணி இவர். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய்கிறது. மத்தியில் செல்வாக்கோடு இருந்ததால் (என்ன பெரிய செல்வாக்கு, தன் குட்டியைத் தானே விழுங்கும் பாம்புகளைப் போல தன் இனத்தை தானே அழிக்க உதவி புரிந்ததற்காக காந்தியின் நன்றி கடன் தான்.) நம்மை யாருமே ஒன்றும் செய்ய இயலாதென்ற அசட்டுத் துணிச்சல். சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது என்பது இது தான் போலிருக்கிறது. யானைக்கு அடி சறுக்கி இருக்கிறது.

                              நாடறிந்த, உலகறிந்த கொள்ளைக்காக கைது செய்யப்பட்ட போலி பெண்ணியவாதிக்கு வழங்கப்படும் தியாகிப் பட்டங்கள் கண்டு உலகம் காறித் துப்புகிறது. வரலாற்றின் வழி நெடுக மக்கள் காறித் துப்பிய எச்சிலில் நீந்தியே தன் வாழ்நாளைக் கழித்து வரும் போலித் தமிழனின் வாரிசு எப்படி இருக்கும்? இப்படித் தான் இருக்கும். அரசியலுக்கு வருவதற்கு நால்வகைக் குணங்களும் இல்லாதிருப்பது தான் அடிப்படை தகுதியோ?  சிறை வாழ்க்கை சிலரை பக்குவப்படுத்தும். நிறை, குறைகளை எடை போட்டுப் பார்க்க வைக்கும். வரலாறு நிறையப் படிப்பினைகளைக் கொடுக்கும். ஆனால் மேற்படி நபர் தன்னுடைய செயலுக்கு வருந்தியர் போல தெரியவில்லை. சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும். நெல் போட்டால் நெற்பயிர் தானே வரும். கொள் பயிரா வரும்? பிணையில் வெளி வருவதற்காக பிரதானமாக முன் வைக்கப்பட்ட வாதமானது குற்றம் சாட்டப்படும் நபர் ஒரு பெண் என்பதாலும், ஒரு குழந்தைக்கு தாய் என்பதாலும் பிணையில் விடுவிக்க வேண்டுமாம். குற்றவாளி ஒரு பெண் என்பதால் விடுவிக்கப்பட வேண்டுமெனில், இவர்களால் பெங்களூரு நீதி மன்றத்தில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழக முதல்வரும் ஒரு பெண் என்பதால் விட்டு விடலாமா? எதற்கு வழக்கு? எதற்கு விசாரணை? பெண் என்றால் பேயும் இரங்கும். சட்டம் இறங்காதா என்ன? மேற்படி கட்சியில் சீட் வாங்க நினைப்பவர்கள், தன் சக்திக்கு உட்பட்டு அடுத்தவர் பணத்தை எவ்வளவு கொள்ளையடித்து கட்சிக்கு கொண்டு வந்து கொட்டமுடியும் என்பது தான் தகுதியாக இருக்கும் போலிருக்கிறது. செய்த அற்பத் தனத்திற்கு ஏனிந்த ஆர்ப்பாட்டம்? தியாகச் சுடரே! எட்டாவது வள்ளலே! உலகின் எட்டாவது அதிசயமே! போன்ற தமிழகராதியில் தேடினாலும் கிடைக்காத பட்டங்கள் எதற்காக?

                              நீங்கள் என்ன அயோக்கியத்தனங்களை செய்தாலும் கண்டுகொள்ள மாட்டான் தமிழன். சில அடுக்குமொழி வார்த்தை ஜாலங்களால் இவர்களை எளிதில் வீழ்த்து. மதுப்புட்டி கொடுத்து அவர்களை மயக்கு. திரைப்பட நடிகனைக் கொண்டு இந்த பன்னாடைத் தமிழர்களை மனங்களை முடக்கு. ஆனால், என் போன்ற பெரியாரின் தொண்டர்கள் சார்பாக ஒரே ஒரு தாழ்மையான கோரிக்கை. இனி வரும் காலங்களில் நான் பெரியாரின் வழி வந்தவன், நான் அவருடைய தம்பி என்று சொல்லி அவரையும், அவருடைய 96 வருட மனித குலம் செழிக்க நடத்திய போராட்டங்களையும், தியாகங்களையும் அசிங்கப்படுத்தாதே!

                                                                   ---------------------------------------------
                                                                            - அகரத்தான்.

No comments:

Post a Comment