Total Pageviews
Monday, 5 August 2013
Wednesday, 15 May 2013
எது முழு உடை...?
"முழு உடை"- எது என்பதைத் தீர்மானிப்பதில்தான் மொத்த சிக்கலும் அடங்கியிருக்கிறது. அதிலும் அதை ஆண் தீர்மானிப்பதால் சிக்கல் இன்னும் கூடுதலாகி விடுகிறது.
சேலைதான் கட்டவேண்டும் சுடிதார் உடுத்தினால் அது ஆபாசமானது என்று எங்கள் ஊர் கல்லூரிகள் சில "முழு உடை"க்கான வியாக்யானம் சொல்கிறார்கள்.
இடுப்பை அப்பட்டமாய் வெளியில் காட்டும் சேலை ஆபாசமானது என்று என் மேலை நாட்டு நண்பன் ஒருவன் கருத்துச் சொல்கிறான்.
வட இந்தியாவில் முக்காடிட்டு முடியை மறைப்பதே "முழு உடை" என்று இந்து மற்றும் இஸ்லாமிய சகோதரிகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய நாடுகள் சிலவற்றிலோ உடல் முழுவதும் மறைக்கும் பர்தா மட்டுமே முழு உடை என்று இலக்கணம் சொல்கிறார்கள்.( பர்தா போடுவது உலகில் 5% பெண்கள் மட்டுமே. பொருளாதார ரீதியில் கீழ் நிலையில் இருப்பவ்ர்களும், மேல் நிலையில் இருப்பவர்களும் போடுவதில்லை)
அவைகளில் நிறைய வேறுபாடுகள் இருந்தாலும், சில நாடுகள் இன்னும் கடுமையாய் "மறைப்பினை" வலியுறுத்துகிறார்கள்.
சில நாடுகளில் நான் ஏற்கெனவே சொன்னபடி பர்தா போட்டிருந்தாலும் பெண்களின் விரல்களைப் பார்த்தால் எங்களுக்கு காம இச்சையை அடக்க முடியவில்லை என்று சொல்லி பர்தா போட்டிருக்கும் பெண்கள் விரல்களை மறைக்கும் கையுறையும் அணிய வேண்டும் என்பதை சட்டமாக்கியுள்ளார்கள்.
இவை மொத்தத்தையும் படித்து சிந்தித்தால் தெரியும் "பெண்ணுக்கான முழு உடை" என்பது ஆணின் மன நோய்க்கு ஏற்றாற்போல் மாறுபாட்டுடன் வற்புறுத்தப்படும் சங்கதிதான் என்ற உண்மை.
எப்படி பெண்ணின் உடல் மீதான உரிமை குறித்து ஆண்கள் தீர்ப்புச் சொல்ல ஒன்றும் இல்லையோ அதுபோலவே பெண்களின் ஆடை மீதான உரிமை குறித்தும் ஆண்கள் தீர்ப்புச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் ரசிப்பது என்பது வேறு. பெண்ணின் உடல் மீது அவள் அனுமதி இல்லாமல் ஆண் நிகழ்த்தும் ஆக்கிரமிப்பு என்பது வேறு.
அத்தகைய ஆக்கிரமிப்பு வக்கிரம் கொண்ட மனித மிருகம், பெண் எந்த உடை அணிந்திருந்தாலும் அந்த வக்கிரத்தை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறது. அவள் ஒரு குழந்தையாய் இருந்தாலும் கூட விட்டு வைப்பதில்லை.
எனவே பாலியல் வன்புணர்வு குறித்த சங்கதிகள் ஆலோசிக்கப்படும் போது, ஆணாதிக்க சிந்தனையோடு மேலும் பெண்ணை அடிமைப்படுத்துவது- நசுக்குவது எப்படி என்ற கோணத்தில் சிந்திப்பது அவளை வன்புணர்வு செய்வதற்கு சமமாய் கொடுஞ்செயலாய் ஆகி விடுகிறது.
அதை விட்டுவிட்டு அவள் அவளுக்கான உரிமையுடன் வாழ்வதற்கான வழி ஏற்படுத்திக் கொடுக்க முயல்வதே சரியான அணுகுமுறையாய் இருக்கும்.
பருவ வயதில் ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் பார்ப்பது மிக இயல்பான ஒன்று. உண்மையில் அதுதான் ஆரோக்கிய உடல்- மற்றும் மனதிற்கான அடையாளம். இதில் தவறு ஒன்றும் இல்லை.
ஆனால் ஒருவரின் உடல் மீதான உரிமை அவருக்கானது. அவரது அனுமதி இல்லாமல் அவர் உடலை ஆக்கிரமிக்க முயற்சிப்பதுதான் குற்றச்செயலாகும்.
தொலைக்காட்சி, இணையம், செல்ஃபோன் பெருகிய இக்காலத்தில் காமம் பற்றியும், காமப்படங்கள் பற்றியும் தெரியாத ஜீவன் எதுவும் இல்லை- குழந்தைகள் உட்பட. அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நம்பினால் நம்மைப் போன்ற ஏமாளிகள் உலகில் இல்லை.
இந்தச் சூழலுக்கு தகுந்தாற்போல் காமத்தில் அடுத்தவர் உரிமையில் தலையிடாமல் இருப்பது எப்படி என்ற படிப்பினை மட்டுமே இப்போது யாவருக்கும் அவசியமானதாக இருக்கிறது.
ஒரு பெண்ணின் உடல் அவள் அனுமதியில்லாமல் நுகரக்கூடியது அல்ல என்ற பொறுப்பு வரவேண்டியது மட்டும்தான் தனிமனித ஒழுக்கத்தில் மிக அவசியமானதாக இருக்கிறது.
அடிப்படையான அதில் கள்ள மௌனம் சாதிக்கும் எவருக்கும் தனிமனித ஒழுக்கம் பற்றிப் பேசும் தகுதி இல்லை.
பெண்களைச் சொத்துக்களின் அட்டவணையில் ஒன்றாய் பார்ப்பதை முதலில் நிறுத்துங்கள். ரத்தமும் சதையும் கொண்ட மனுஷி அவள். அவள் உடல் பற்றிய உரிமை அவளுக்கானது. அவளைப் பூட்டி வைப்பது, அடைத்துப் போடுவது என்பவை எல்லாம் குரூர சிந்தனைகள்.
உங்கள் சகோதரியும் என் சகோதரியும் சமமான மதிப்பிற்குரியவர்க்ளே.
இருவரின் உடலின் மீதும் அவர்களின் அனுமதி இல்லாமல் எந்த ஆண்மகனுக்கும் உரிமை இல்லை. இதை பெற்றோர்கள் ஒவ்வொரு ஆண்குழந்தைக்கும் சொல்லி வளர்த்தால் போதும். வன்புண்ர்வு நின்றுவிடும். காமம் என்பது இன்பம் கொடுத்து இன்பம் எடுப்பது என்ற புரிதலையும் வளர் இளம் பருவத்தில் சொல்லிக் கொடுப்பது அவசியம். "கற்பழிப்பது" காதலோ, காமமோ அல்ல ஒரு வக்கிரம் மட்டுமே என்ற புரிதல் இருபாலருக்கும் உதவும்.
அதை விட்டு, தனியே போகாதே- இருட்டில் போகாதே- போர்வை போட்டு மூடிக்கொண்டு போ என்று சக ஜீவனை வற்புறுத்துவது ஆண்மைக்கு அழகல்ல.
கரையில் நிற்கும் கப்பல் பாதுகாப்பானதுதான்; ஆனால் கப்பல் கட்டுவது கரையில் நிறுத்தி வைப்பதற்காகவா?
ஒருவேளை நம் மகளை பிறந்தது முதல் அவளுக்கு 60 வயதாகும் வரை ஒரு அறைக்குள்ளேயே பூட்டி வைத்து வெளியுலகம் தெரியாமல் நான் வளர்க்கிறேன் என்றால் அவளை நான் "கற்புடன்" வளர்த்தெடுப்பதில் வெற்றி பெறலாம்.
ஆனால் அவள் மனுஷியாய் இவ்வுலகிற்கு வந்தது ஒரு அறைக்குள் அடைந்து கிடப்பதற்காகவா?
நம் மகள் சுதந்திரமாக- சக மனிதர்களிடம் நம்பிக்கையுடன் எல்லா இடங்களுக்கும் பயணப்படும் வசதி கொண்ட சமூகத்தை வளர்த்தெடுப்பதே நம் இலட்சியமாய் இருக்கும்.
- Ilangovan Balakrishnan.
Subscribe to:
Posts (Atom)